Monday, October 21, 2013

ஒளி காட்டும் வழி

வாசலை அலங்கரிக்கும் கோலங்களில்லை
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா
அமைதியான தீபாவளி இன்று
கடல் கடந்து அமெரிக்காவில் !!
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்
இருள் அகன்று ஒளி பிறப்பது போல
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென
வாழ்த்தி வழி காட்ட
என்னவளுடன் என் முதல் தீபாவளி
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஒளி காட்டும் நல்வழி  !!

இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.

Saturday, August 10, 2013

எனது முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு

எனது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவை எழுத என்னை அழைத்த அன்பு நண்பர் கிரேஸ்க்கு நன்றி :).

பதிவுலகம் வந்த இரண்டு ஆண்டுகளான பின்னும் நான் இது வரைக்கும் எழுதின பதிவுகள் 39 தான். மற்ற பதிவுலக நண்பர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிக மிக குறைவு என்றாலும் 2-3 பதிவுகளாவது எழுத வேண்டும் என்று தொடங்கிய எனக்கு 39 என்பது சாதனையே :)

சரி.. கதைக்கு வருவோம். எனக்கு எப்படி இந்தப் பதிவு ஆர்வம் வந்தது??.. எல்லாரும் வானத்தை பார்த்துகோங்க, ஒரு சின்ன பிளாஷ்பேக் போக போறோம் :)

பள்ளி படிப்பு முடிச்சு ஒரு 10 வருஷம் இருக்கும். முக்கியமா சொல்லணும்னா தமிழ்ல எழுதி 10 வருஷம் இருக்கும். ஒரு நாள் அப்பா வந்து, "TNEBக்கு கரண்ட் இணைப்பு வாங்க தமிழ்ல ஒரு அனுமதி கடிதம் எழுதணும், சீக்கிரம் எழுதி கொடு" என்று சொல்லிட்டு போயிட்டாரு.  நானும் எழுத ஆரம்பித்தேன். அம்மாடியோவ் !! எவ்வளவு தப்பு, எந்த 'ல' போடணும்னு குழப்பம், எந்த 'ண' போடணும்னு குழப்பம்   எந்த 'ர' போடணும்னு குழப்பம்.  இப்ப நினைச்சாலும் வெட்கமா இருக்கு.  அப்ப தான் தெரிந்தது நான் தமிழ்ல எவ்வளவு மோசமா போயிட்டு இருக்கேன்னு.  இத்தனைக்கும் சொன்னா சிரிப்பிங்க, 12 ஆம் வகுப்பில் எங்கள் பள்ளியில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவன். அப்பா வந்து "என்னடா தமிழ்ல எழுத இவ்வளவு தடுமாறேனு" கேட்டப்ப சுருக்குனு வலிச்சது.  இதை சரி செய்ய ஒரே வழி தமிழில் எழுதி கொண்டே இருப்பது தான் என்று முடிவு செய்தேன். கையில் எந்த காகிதம் கிடைத்தாலும் தமிழில், எனக்கு தெரிந்த திருக்குறள், பாடல் வரிகள், கட்டுரைகள்னு எதாவது எழுதிகிட்டே இருப்பேன். அப்புறம் ஒரு 2 வருடம் கழித்து என் நண்பர் கிரேஸ் அவர்களின் பதிவுகளை தற்செயலாக காண நேர்ந்த பொழுது, "அட இது நல்லா இருக்கே, நாம் தமிழ் கூட எப்பவும் இருக்கலாமே, நானும் இதை பண்ணா என்னனு தோணுச்சு".  முதல் பதிவில் கிரேஸ் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கி விட்டு ராஜா ராஜ சோழனுடன் தொடங்கியது எனது வலையுலக பயணம் :).  

அவ்வளவு தாங்க பிளாஷ்பேக் .. இப்ப நீங்க தரையை பாக்கலாம் :)

ஏன்டா தமிழ்ல கொலை பண்றேனு  சில திட்டுகள் வந்தாலும், 
பல நண்பர்களின் தொடர் ஊக்கம் என்னையும்  காமராஜர், மகாகவி, இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும் உள்ளிட்ட கட்டுரைகளும், 
விழித்து எழு தமிழா, குழந்தை தொழிலாளிமாய உலகம் உள்ளிட்ட கவிதைகளையும் எழுத வைத்தது. என் தமிழை சீர் செய்ய வேண்டும்
என்ற வெறியுடன் தொடங்கிய இந்த முயற்சி, சக பதிவர்களின் படைப்புகளின் தாக்கத்தினால் இப்பொழுது விரிந்து தமிழின் சுவையை முழுவதுமாக சுவைக்க வேண்டும் என்பதை நோக்கி செல்ல தொடங்கி விட்டது.

நான் வாழ்க்கைல செய்த உருப்படியான காரியத்தில் இதுவும் ஒன்று என்ற மனநிறைவினை தருகிறது. எனவே, நீங்க போதும் நிறுத்துடானு சொன்னாலும் தொடர்ந்து எழுதுவேன். :). 

Thursday, August 1, 2013

இதயம் வரையும் மடல்

என்னவளுக்கு என் இதயம் வரையும் மடல் --

நிழலென என்னுடன் வரவிருக்கும் என்னவளே,
இன்னுயிருடன் இணையவிருக்கும் இனியவளே,
காலங்கள்  அனைத்தையும் வசந்த காலமாக மாற்றவிருப்பவளே,
சூறாவளியையும் தென்றலாக வீச வைப்பவளே,
இருளை அகற்ற வந்த வெண்ணிலாவே,
வாழ்க்கையை மணக்கச் செய்ய வந்த மல்லிகையே,
தனிமை சிறையிலிருக்கும் எனை விடுவிக்க வந்த தாரகையே,
நெடும் பயணத்திற்கு துணையாய் வரவிருக்கும் என் பாதியே,
என்னை என்னிடமிருந்து திருடியதற்கு தண்டனையாக,
உனை எனில் சிறை வைக்கப் போகிறேன் 
நம் திருமணத்தின் மூலம்...

Tuesday, July 2, 2013

மூடர்கள், பகுத்தறிவாளிகள்

தெய்வங்களைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள்  மூடர்கள்,
தங்கள் தலைவரைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள் பகுத்தறிவாளிகள் !!.

கீதைப் படி அன்பு வழி நடக்க
முற்படுபவர்கள் மூடர்கள்
தங்கள் தலைவரின் சொற்படி கோவிலையும் இடிக்க
முற்படுபவர்கள் பகுத்தறிவாளிகள் !!

மந்திரங்கள்  ஓத கடவுள் சாட்சியாக திருமணம் 
செய்பவர்கள்  மூடர்கள்,
சம்பிரதாய பேச்சுடன் தங்கள் தலைவர் சாட்சியாக திருமணம் செய்பவர்கள் பகுத்தறிவாளிகள் !!

கடவுளின் பெயரால் நற்செயல்
செய்தாலும் மூடர்கள்,
தலைவரின் பெயரால் நற்செயல்
செய்தால் மட்டுமே  பகுத்தறிவாளிகள் !!

செயல் ஒன்று அர்த்தம் மட்டும் ஏனோ இரண்டு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மூடர்கள்,
'தலைவன்' நம்பிக்கை கொண்டவர்கள் பகுத்தறிவாளிகள்,
என்ற இந்த பார்வை கொண்டவர்கள் என்று மாறுவார்கள் ?? 

Sunday, May 12, 2013

சங்க இலக்கியச் சுவையைத் தேடி முதல் படி...

என் வலைப்பதிவு தொடங்கிய பொழுது சங்க இலக்கியம் குறித்து
பதிவு எழுதும் அளவிற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

பள்ளியில் சங்கப் பாடல்களை படிக்கும் பொழுது, மதிப்பெண் பெற வேண்டும் என்று நோக்கத்தில் மனப்பாடம் செய்தேனே தவிர ரசித்தோ, புரிந்தோ படிக்கவில்லை. " சங்கப் புலவர்கள் அவங்க பாட்டுக்கு எழுதிவிட்டு போய்ட்டாங்க யார் மனப்பாடம் செய்து எழுதுவது" என்று பல நேரங்களில் சங்கப் புலவர்களை கூட கடிந்து கொண்டது உண்டு. ஆண்டு தோறும் முப்பது குறள்களை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற காரணத்தினால் திருவள்ளுவரை கூட கடிந்து கொண்டது உண்டு.(தமிழ் அறிஞர்கள் என்னை மன்னிக்கவும் :)).

ஆனால் இன்று திரும்பி பார்க்கும் பொழுது இவ்வளவு செழுமையான இலக்கியத்தை நான் எப்படி ரசிக்காமல் இருந்தேன் என்று நினைத்தால் சற்று வெட்கமாக இருக்கிறது. மதிப்பெண்ணை குறிவைத்தே ஓடியதால் சங்க இலக்கியத்தின் செழுமையை காணத் தவறி விட்டேன்.  இன்றோ மதிப்பெண் இல்லை, பரீட்சை இல்லை, தேடல், ஆர்வம் மட்டும் உள்ள காரணத்தினால் சங்க இலக்கியத்தின் செழுமையையும்,  அதில் இருக்கும் இனிமையும் உணர முடிகிறது.

எனது நண்பர் கிரேஸ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், அவரது சங்க இலக்கியம் குறித்தப் பதிவுகளும், எனது இந்த மாற்றத்திற்கும், என் தமிழ் தேடலுக்கும் மிக முக்கிய காரணம். எனவே, அவருக்கு என் நன்றிகளை கூறிக் கொண்டு,  முனைவர் இரா. ருக்மணி அவர்கள் எழுதிய "முல்லைப் பாட்டும், பண்டைத் தமிழகமும்"  என்ற புத்தகத்தின் மூலம் நான் ரசித்த முல்லைப்பாட்டிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை, விளக்கவுரையுடன் இங்கு பகிர்கிறேன், உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு :)

ஆசிரியர் - நப்பூதனார்
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
  .................................................................அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் 


விளக்கவுரை  -
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக்
கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்.

மலர்ந்து மணம் வீசும் காயா, செங்காந்தள் போன்ற மலர்கள் மூலம் முல்லை நிலத்தின் அழகையும், தவறாமல் பெய்யும் மழையினால் விளைந்த கதிர் மூலம் முல்லை நிலத்தின் செழுமையும், துள்ளித் திரியும் மான்கள் மூலம் முல்லை நிலத்தில் குடி கொண்டுள்ள மகிழ்ச்சியையும் ஒரு சேர அழகாக எடுத்தக் காட்டுகிறது இந்த அற்புதமான பாடல்.

மற்றுமொரு என் மனம் கவர்ந்த பாடல்...

பாசறையில் காவலாளர்
நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள்
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசை வந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ   



விளக்கவுரை 
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமம்.அப்பொழுதில் காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள்,  நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல – தலையில்  தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்  தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு பாதுகாவலைச் செய்தனர்.

உழைத்து களைத்த காவலரின் நிலையை காற்றில் ஆடும்
மல்லிகை கொடியுடன் உவமைப்படுத்திய ஆசிரியர் நப்பூதனாரின் கற்பனையை என்னவென்று சொல்வது.  வகுப்பறையில் எனது நிலைமையை நினைவுப் படுத்திவிட்டார். :)

மேலும் முல்லைப்பாட்டின் பல பாடல்களையும், அதற்கான விளக்கவுரைகளையும் இந்த தளத்தில் http://learnsangamtamil.com/mullaipattu/ காணலாம்.

Saturday, April 13, 2013

தமிழ்ப் புத்தாண்டும், குழப்பமும்...

தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள் என்று கடந்த சில ஆண்டுகளாக ஒரு குழப்பம் நம்மிடையே நிலவுகிறது. தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும், 'இல்லை!! இல்லை'  சித்திரை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும் சொல்லி வருகிறார்கள்.

எது நம்மப் புத்தாண்டு என்று ஒரு அலசு அலசுவோமா?

தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சொல்பவர்கள் வைக்கும் முக்கியமானக் காரணங்கள் இதோ....

1. 1921 ஆம் ஆண்டு தமிழ்ப் பண்டிதர்களான மறைமலை அடிகள்,
திரு.வி.க. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்,  நாவலர் சோம. சுந்தர பாரதியார்,
கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் கூடி தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டினை (திருவள்ளுவர் காலம் கி.மு. 31, வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

2. குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கி, அதனைத் தமிழர்கள் மீது திணித்தான் என்றும், பிரபவ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும் ஆண்டுகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான் என்பதே இதற்குச் சாட்சி என்றும் கூறுகின்றனர்.

இவற்றைப் பார்க்கும் பொழுது "அட, சரியாத் தான் சொல்றாங்க" என்று தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா?. சரி சரி முடிவு செய்யும் முன் இன்னொருத் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டாமா? தொடர்ந்து படிங்க...

இதோ சித்திரை முதல் நாளே புத்தாண்டு என்றுக் கூறுபவர்களின் வாதம்...

1. தமிழர்களின் ஆண்டு முறை சூரியன் கொண்டு வரையறுக்கப்பட்டது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம்), 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்தரையாகும்.
(நன்றி: விக்கிப்பிடியா)

2. ஒரு ஆண்டு இளவேனில்(சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி(மார்கழி, தை),  பின்பனி(மாசி, பங்குனி) என ஆறுப் பருவங்களைக் கொண்டது. வசந்தம் வரும் இளவேனில் காலம் தொடங்கும் சித்திரை மாதத்தைப் புத்தாண்டாய் கொள்வது தான் சரி என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

3. சூரியனை ஆதாரமாகக் கொண்ட மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா போன்ற வேறு மாநிலத்தவரும், நேபாளம், பர்மா, கம்போடியா போன்ற வேறு நாட்டவரும் சித்தரை ஒட்டியேத் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

4. அகத்தியரும்  பன்னிராயிரத்தில், பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

5. ஜாதகமும், ஜோசியமும் சித்தரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டதே.

6. 1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ்ப் பண்டிதர்கள் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது உண்மையானால், இத்தனை வருடங்களாகியும் அது நடைமுறைப் படுத்தப்படாதது ஏன்?

7. வடமொழிப் பெயர்கள் கொண்ட ஆண்டுகள் நெருடலை தரும் பட்சத்தில், கால அட்டவணை மாற்றுவதற்குப் பதில் வடமொழி ஆண்டுகளுக்கு இணையானத் தமிழ்ப் பெயர்களை தேடலாமே? என்று நினைத்த பொழுது, இந்த படத்தைக் காண நேர்ந்தது.  அழகாக 60 ஆண்டுகளுக்கும் இணையானத் தமிழ்ப் பெயர் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் வழக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் போதுமானது.


இவை அனைத்தும் பார்க்கும் பொழுதுச் சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற வாதமே ஏற்புடையதாக உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமில்லாது உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் பொதுவான திருநாள். அது குறித்து எந்த முடிவாயினும் தமிழகம் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுச் சரியல்ல. 

சித்தரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது பல நூறு வருடங்களாகக் கொண்டாடி வரும் ஒரு வழக்கம். அதை திடீரென்று எப்படி மாற்றிக் கொள்ள முடியும். மாற்றுவதால் யாருக்கு என்னப் பயன்? மாற்ற நினைத்தால் குழப்பம் தானே வரும்.

எனவே தேவையற்ற குழப்பத்தைத் தவிர்த்து நம் புத்தாண்டு சித்திரை முதல் நாளே என்பதில் உறுதியாய் இருப்போம்.

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விஜய வருடம் இனிதே விஜயமாகட்டும் :)

Thursday, April 4, 2013

நீயின்றி அணுவும் அசைவதில்லை

என் வாழ்வூதியம்  தரும் முதலாளியானாய்,
என் தனிமைக்குத் துணையானாய்,
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.

இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய்.

நீ நல்லவனா?  வல்லவனா?  கொடியவனா?
தெரியவில்லை..  ஆயினும்
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!

  

Friday, March 22, 2013

இதுவும் நடக்கும்....

இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும்,
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும்,
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும்,
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும்,
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும்,
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும்,
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்,
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும்,
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும்,
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும்,
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும்,
இவை எல்லாம் நடக்கும்,
இதற்கு மேலும் கூட நடக்கும்.
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!

Thursday, March 21, 2013

உயிர் மொழி

ன்பு நிறைந்த மொழி,
ண்டவன் அருளிய மொழி,
லக்கணமில்லா மொழி,
டு இணை இல்லா மொழி, 
வகை தரும் மொழி,
ரார் அனைவரையும் மயக்கும் மொழி,
ளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
க்கம் தீர்க்கும் மொழி,
யமேதும் எழா மொழி,
ளிவு மறைவற்ற மொழி,
ங்கார இசையினும் இனிய மொழி,
வை ரசித்த மொழி,
தே.. மழலை மொழி !!..

Saturday, March 16, 2013

குழந்தை தொழிலாளி



கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்
கல் உடைக்கிறேன்,

கடனாளி பெற்றோரிகளின்
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,

படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,

ஓடியாடி விளையாடாமல்  பணத்தாசை ம(மா)க்களுக்காக
ஓடியாடி உழைக்கிறேன்,

சிறப்பான கல்வியினை நோக்கி  ஓட ஆசை கொண்டும்
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,

ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை   கண்களின்
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,

ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த   போதும்
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,

பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை  மட்டுமே
பரிசாகத்  தருகின்றன,

இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?

கருவறையிலிருந்து   வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?

என் கதறலை  உன் செவி கேட்க மறுக்கிறதா ?
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?

இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது 



Friday, February 1, 2013

மாய உலகம்


என் விழித்திரையில் விழும் காட்சிகள்,
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,
இவை மட்டும் தான் நிஜமோ?
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை
ஏன் என்னால் உணர முடியவில்லை?
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!

ஓட்டம்


சிறுவயதில் விளையாட்டை மறந்து
தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து
 'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,
பின் குடும்பத்தைப் பிரிந்து
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,
இன்று தாய்நாட்டை துறந்து
பணத்தை நோக்கி ஓட்டம்,
எதற்காக இந்த தொடர் ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?
Related Posts Plugin for WordPress, Blogger...